. கணினி அறிவியல் மாணவர்களுக்காக

Search This Blog

Friday, May 14, 2010

சாதனையும் வேதனையும் !

முதலில் சாதனைக்கு பாராட்டு!

சதுரங்க விளையாட்டின் முப்பரிமாணங்களிலும் (League, Knock Out and Match) உலக சாம்பியன் பட்டம் வென்று, அவரை உலக சாம்பியன் என்று அங்கீகரிக்க மறுத்து வந்த ஒரு பிரிவினரை வாயடைக்கச் செய்த, நமது சதுரங்க சக்கரவர்த்தி விஸ்வநாதன் ஆனந்த இப்போது "மிகக் கடுமையான போட்டியாளராக" கருதப் படும் டோபலோவ்'வை வீழ்த்தி, தனது உலக சாம்பியன் பட்டத்தை வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்டுள்ளார். போட்டி ஆரம்பிப்பதற்கு சற்று முன்னே எரிமலை குழம்பின் காரணமாக ஐரோப்பியாவில் விமான போக்குவரத்து தடைபட்டது விஸ்வநாதன் ஆனந்தின் தயார் நிலையை வெகுவாக பாதித்தது. இந்த போட்டியின் முதலாவது ஆட்டத்திலேயே ஆனந்த் தோல்வி அடைந்தது அவரது தயாரின்மையை வெகுவாக வெளிப்படுத்தியது. இருந்தாலும் சாம்பியன்கள் எளிதில் வீழ்வதில்லை என்பதற்கு உதாரணமாக சிறப்பாக மீண்டு வந்த அவர் போட்டியின் எட்டாவது ஆட்டம் வரை முன்னிலையே வகித்து வந்தார். டோபலோவ் இறுதி கட்டத்தில் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்றும் ஆனந்தின் வயது மற்றும் உடல் வலு-குறைவு ஆகியவை கடைசி கட்டத்தில் அவருக்கு எதிராக அமையும் என்று சில சதுரங்க முன்னாள் வீரர்கள் கணித்ததற்கு மாறாக வெற்றியாளர்களுக்கு எதுவும் தடையில்லை என்பதை ஆனந்த் மீண்டும் ஒரு முறை நிருபித்துக் காட்டினார்.

அவருக்கு நமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் இங்கே பதிவு செய்வோம்.

இப்போது வேதனைக்கு ஆறுதல்!

20-20 உலக கோப்பை போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சூப்பர் லீக் போட்டிகள் அனைத்திலும் தோல்வியடைந்து செமி பைனல் வாய்ப்பையும் இழந்து திரும்பி இருக்கிறது டோனி தலைமையிலான இந்திய அணி. தொடர்ந்து பல நாட்கள் உள்ளூரின் சாதகமான ஆடுகளங்களில் சாதாரண பந்து வீச்சாளர்களுடன் மோதியது, இந்திய பேட்ஸ்மென்களின் தயார்நிலையை வெகுவாக பாதித்தது. கோடை வெயில் வீரர்களின் உடல் தகுதியை ஒருபக்கம் பாதிக்க, இன்னொரு பக்கம் இரவு நேர கேளிக்கைகள் அவர்களின் மனரீதியான தயார்நிலையை பாதித்திருக்கின்றன. குறிப்பாக முக்கியமான உலகக் கோப்பைக்கு இடையேயும் கூட "கேளிக்கைகளுக்காக" நான்கு நாட்கள் இந்திய வீரர்கள் முழுமையாக செலவழித்தது அவர்கள் "ஐபிஎல் ஜுரத்திலிருந்து" முழுமையாக வெளிவரவில்லை என்பதையே வெளிக்காட்டுகிறது. சில நாட்களுக்கு முன்னர் வரை அவர்களை கடவுளர்களாக சித்தரித்த நமது கிரிக்கெட் விமர்சகர்கள் இப்போது அவர்களை தரக்குறைவாக விமர்சிப்பது வேடிக்கையாகவே இருக்கின்றது. "இதுவும் கடந்து போகும்" என்ற தத்துவம் கிரிக்கெட் விளையாட்டுக்கு மிகவும் நன்றாகவே பொருந்தும். அடுத்து வரும் ஜிம்பாப்வே தொடரில் இந்தியா வெற்றி பெற்றால் போதும். இந்திய அணியினர் மீண்டும் கடவுளர்கள் ஆக்கப் படுவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

எனவே இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெரிய அளவில் கவலைப் பட வேண்டியதில்லை.

அதே சமயம் கேளிக்கைக் களங்களை விட போராட்டக் களங்களிலேயே பெருவாரியான வெற்றிகள் ஈட்டப்பட்டிருக்கின்றன என்பதை அவர்கள் விஸ்வநாதன் ஆனந்த் போன்றவர்களிடமிருந்து கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment